ஆலைக்கு சீல்: ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அடுத்த மூவ் என்ன?


ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதற்கு எதிராக அனைத்து சட்ட வாய்ப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து 100 நாட்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ம் தேதி நடைபெற்ற பேரணியில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் வெளியிட்டிருந்த அறிக்கையில் , “ கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதி ஆணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஆலை நிர்வாகம் இதனை புதுப்பிக்க விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே விதித்திருந்த மாசு கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்மந்தப்பட்ட நிபந்தனைகளை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத காரணத்தால் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து அதற்கான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது”. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆலை மூடப்பட்டது குறித்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் `மின்ட்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருக்கிறோம். வருகிற ஜூன் 6-ம் தேதி  மேல்முறையீட்டு ஆணையத்தில் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. ஆலை இங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அதனால்தான் நாங்கள் மேல்முறையீட்டு ஆணையத்தை நாடியுள்ளோம். மேல்முறையீட்டு ஆணையத்தின் தீர்ப்பை பொறுத்து நாங்கள் அடுத்தக்கட்ட முடிவை எடுக்க உள்ளோம். எங்கள் ஆலையில் 3,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நாங்கள் ஏன் எங்கள் சொந்த ஆலையை விட்டுக்கொடுக்க வேண்டும்.

எங்களுடைய ஆலை அனைத்து விதிமுறைகளின் படியே இயங்குகிறது. அளவுகோலுக்கு மேலாக நாங்கள் உற்பத்தி செய்கிறோம் என்பதை எந்த அடிப்படையில் கூறுகிறார்கள் என்று புரியவில்லை. அவர்களிடம் அதற்கான தரவுகளும் இல்லை. அந்தக் குற்றச்சாட்டு பொய்யானவை. இவ்வாறு ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் கூறியுள்ளார்.

Sterliteஐ மூடும் அரசாணை வந்த உடன், சுற்றுசூழல் ஆர்வலர் திரு.நித்யானந்த ஜெயராமன் அவர்கள் அடுத்து வரும் சட்டப்போராட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தமிழக அரசு கவனத்துடன் களைய வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். அதில் ‘தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறும் கூற்றுகளை கண்மூடித்தனமாக நம்பாமல் தமிழக அரசு தன் அதிகரத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டங்களையும் பயன்படுத்தினால் மட்டுமே இந்த தடை கோர்ட்டில் வெல்ல முடியும்’ என்று குறிப்பிட்டுருந்தார்.

இதை உறுதி செய்யும் விதத்தில் வேதான்தாவும் ‘நாங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை கடைபிடித்தே வருகிறோம்’ என்று கோர்ட்டில் களம் இறங்குகிறது.

இதே போன்றுதான் 2013லும் தமிழக அரசின் தடையை உச்சநீதிமன்றத்தின் மூலம் தப்பித்து வந்தது இந்த ஆலை.

ஆனால் இம்முறை அவ்வாறு நடக்க விடமாட்டோம் என்றும் முன்பை விட இப்பொழுது எங்களுக்கு அதிக விழிப்புணர்வும் அரசியல் சட்ட புரிதலும் உள்ளதாக தூத்துக்குடி மக்கள் இணைய வழியாக Kakakapoவிடம் தெரவித்தினர்.

இப்போரட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நியாயம் கிடைக்க உயிர் உள்ள நாம் துணை நிற்போம்!

Exit mobile version